புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திராகாந்தி பவன் திறப்பு விழா டெல்லியில் நேற்று நடந்தது. காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி புதிய தலைமையகத்தை திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மிக முக்கியமான தருணத்தில் நாம் இந்த புதிய தலைமையகத்தை பெற்றுள்ளோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 1947ல் கிடைத்தது உண்மையான சுதந்திரம் அல்ல, ராமர் கோயில் கட்டிய பிறகே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என கூறியிருக்கிறார்.
அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் அடையாளச்சின்னம் அல்ல என கூறியிருக்கிறார். சுதந்திர போராட்டம் பற்றியும் அரசியலமைப்பு சட்டம் பற்றியும் உண்மையில் அவர் என்ன நினைக்கிறார் என்பதை தேசத்திற்கு சொல்லியிருக்கிறார். ஆனால், அரசியலமைப்பு சட்டம் செல்லாது, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டம் செல்லாது என மோகன் பகவத் கூறியது தேச துரோகத்திற்கு சமம். இதையே வேறு நாட்டில் பேசியிருந்தால் அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார். அவரது பேச்சை கேட்டு எதிர்த்து கூச்சலிடுவார்கள் பின்னர் அடங்கிவிடுவார்கள் என அவர்கள் நினைக்கின்றனர்.
எனவே, இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடியை வணங்குவதில்லை, தேசியக் கொடியை நம்புவதில்லை. அரசியலமைப்பை நம்புவதில்லை. அவர்கள் இந்தியா மீது முற்றிலும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியாவை ஒரு நிழலான, மறைக்கப்பட்ட ரகசிய சமூகத்தால் நடத்த விரும்புகிறார்கள். இந்தியா ஒரு மனிதனால் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக நாட்டின் குரலை நசுக்க விரும்புகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் இந்த கட்டிடம் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, படேல் மட்டுமின்றி ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் ரத்தத்திலிருந்து உருவானது. இந்த அறையில் உள்ள ஒவ்வொரு நபரும் காங்கிரஸ் கட்சியின் கருத்தைப் பாதுகாக்கிறார்கள். அதற்காக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனாலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவிடம் சரணடையவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் நாங்கள் நம்பும் கருத்துக்களைத் தாக்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் நாங்கள் ஒரு நாகரிகப் போரை நடத்துகிறோம். இது நியாயமான போர் என்று நினைக்காதீர்கள். இதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில், நாங்கள் பாஜ அல்லது ஆர்எஸ்எஸ் போல போராடவில்லை. அவர்கள் ஒவ்வொரு அரசு நிறுவனங்களையும் கைப்பற்றி உள்ளனர். எனவே நாங்கள் இப்போது, பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
* காங். மட்டுமே எதிர்க்க முடியும்
ராகுல் காந்தி மேலும் பேசுகையில், ‘‘பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக காங்கிரஸ் மட்டுமே போராட முடியும். இந்த நாட்டில் அவர்களை தடுக்கக்கூடிய வேறு எந்தக் கட்சியும் இல்லை. அதற்கு காரணம், நாங்கள் ஒரு சித்தாந்தக் கட்சி. எங்கள் சித்தாந்தம் நேற்று தோன்றவில்லை’’ என்றார்.
* பாஜ கண்டனம்
பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியாவை இழிவுபடுத்த விரும்பும் நகர்ப்புற நக்சல்களுடன் ராகுலுக்கும், அவரது சகாக்களுக்கும் தொடர்பு இருப்பது ஒன்றும் ரகசியமில்லை. இப்போது, இந்திய அரசை எதிர்த்து போரிடுவதாக அவர் கூறியிருப்பதன் மூலம் மோசமான உண்மையை அவர் அம்பலப்படுத்தி உள்ளார்’’ என்றார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம் என ராகுல் காந்தி கூறுகிறார். அப்படி என்றால், நீங்களும், காங்கிரசும் எதற்காக உங்கள் கையில் அரசியலமைப்பின் நகலை எடுத்துச் செல்கிறீர்கள்?’’ என கேள்வி கேட்டுள்ளார்.
* தேர்தல் நடைமுறையில் பெரிய பிரச்னை உள்ளது
பாஜ, ஆர்எஸ்எஸ்சை மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் ராகுல் காந்தி சந்தேகம் எழுப்பினார். இது குறித்து அவர் பேசியதாவது: நாட்டின் தேர்தல் நடைமுறையில் மிகப்பெரிய பிரச்னை உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அங்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இடையே ஒரு கோடி வாக்காளர்கள் வித்தியாசம் உள்ளது. வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த திடீர் அதிகரிப்பு குறித்த எங்கள் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் தர மறுத்து விட்டது. தேர்தல் ஆணையம் ஏன் எங்களுக்கு வாக்காளர் பட்டியலை தரவில்லை? அது எந்த விதத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்? இப்படி மறைப்பது எந்த நோக்கத்திற்கு உதவுகிறது? எனவே தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் விதம் எங்களுக்கு பிடிக்கவில்லை’’ என்றார்.
* நாட்டில் நடமாடுவது கடினமாகி விடும்
புதிய தலைமையகம் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘2014ல் தான் பிரதமரான பிறகுதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக மோடி நினைக்கிறார். ராமர் கோயில் கட்டிய பிறகுதான் சுதந்திரம் கிடைத்ததாக ஆர்எஸ்எஸ்காரர்கள் நம்புகிறார்கள். இப்படி, சுதந்திரத்துடன் எந்த தொடர்பும் இல்லாத, அதற்காக போராடாதவர்கள், ‘உண்மையான சுதந்திரம்’ குறித்து பேசுகிறார்கள். இது வெட்கக்கேடானது. மோகன் பகவத் தொடர்ந்து இதுபோன்ற பேச்சுக்களை பேசி வந்தால் நாட்டில் நடமாடுவது கடினமாகி விடும். காங்கிரஸ் செய்த பணிகளை மறந்து, அது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததை மறந்துவிடுபவர்களால் எந்த வரலாற்றையும் படைக்க முடியாது. இன்றைய கட்சிகள் நாட்டிற்காக உழைப்பதற்கு பதிலாக காங்கிரசை துஷ்பிரயோகம் செய்யவே அதிக நேரத்தை செலவிடுகின்றன. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளை எதிர்த்து போராடும் மையமாக இந்த அலுவலகம் மாறும்’’ என்றார்.
The post ராமர் கோயில் கட்டிய பிறகே உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிற ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு தேச துரோகம்: காங். தலைமையகம் திறப்பு விழாவில் ராகுல் ஆவேசம்; இந்திய அரசுக்கு எதிராக போராடுவதாக பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.