தோகா: இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதை அடுத்து, ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த இந்த தாக்குதலில், 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்தனர்.
பதிலுக்கு ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு இதுவரை 44,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் முடிந்தபாடில்லை. கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீடு காரணமாக, 100க்கும் மேலான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் 150க்கும் மேலானோர் பணயக்கைதிகளாக இருந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப், ‘பதவி ஏற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கடும் பாதிப்பை ஹமாஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பணயகைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் காரணமாக 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்தும், ஹமாஸ் பிடியில் சிக்கி இருக்கும் பணையக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். போர் நிறுத்த அறிவிப்பு காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The post இஸ்ரேல்- காசா போர் முடிவுக்கு வந்தது: இரு தரப்பினர் ஒப்புதல் appeared first on Dinakaran.