
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2021-ம் ஆண்டு பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் அதுவும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அந்த ஒரு படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில், அதற்கு காரணம் என்ன என்பதை ஜுவாலா கட்டா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
'நடிகர் நிதின் என் நண்பர். ஒருநாள் அவர் என்னிடம் 'என்னுடைய குண்டுஜாரி கள்ளன் தையின்டே படத்தில் ஒரு பாடல் ஒன்று உள்ளது. அதில் நீங்கள் நடிக்கிறீர்களா?' என்று கேட்டார். நானும் விளையாட்டாக கேட்கிறார் என்று அதற்கு சரி சொல்லிவிட்டேன். ஆனால் மூன்று மாதம் கழித்து எல்லாம் ரெடியாக இருக்கிறது படப்பிடிப்புக்கு வர தயாரா? என்று கேட்டார். அப்போது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
நான் மாட்டேன் என்றால் அதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் அந்த பாடலில் ஆடினேன். அதன்பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டேன்' என்றார்.