
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இது முதல் ஆட்டமாகும். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், கெய்க்வாட் 53 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 2012-ம் ஆண்டுக்கு பிறகு தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் 13-வது ஆண்டாக தொடருகிறது.