ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம்

2 months ago 12

டெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான சட்ட மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை சட்டமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவரும் இந்த திட்டத்தை ஆதரித்து வந்தவருமான ராம்நாத் கோவிந்த் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்த நிலையில், திட்டத்திற்கான ஒப்புதலை ஒன்றிய அமைச்சரவையும் அளித்துவிட்டது.

இந்த சூழலில் நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சியினர் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை உருவாக்க ஒன்றிய அரசு விரும்புவதால் விரிவான விவாதத்திற்காக இந்த மசோதா, நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த முக்கிய சட்ட மசோதா குறைந்தது 6 அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த மசோதாக்களை உள்ளடக்கியது என்பதும் அவற்றை நிறைவேற்ற இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article