ஐதராபாத்,
வங்காளதேச அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இதில் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சனை பொறுத்தவரை திறமையான, அதிரடி ஆட்டக்காரர் ஆவார். இந்திய அணியின் தனக்கென்று ஓர் இடத்தை பிடிக்க இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் அவர், தனக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
அதேபோலவே இன்றைய போட்டியிலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அவர், பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்கவிட்டார். குறிப்பாக, வங்காளதேச சுழற்பந்துவீச்சாளர் ரிஷத் ஹுசேன் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டார்.
தனது வழக்கமான ஆட்டத்தை ஆடி வந்த சூர்யகுமார் யாதவ், எதிர்முனையில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தை சிரித்தபடி ரசித்துக்கொண்டிருந்தார். டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை வெறும் 40 பந்துகளில் சஞ்சு சாம்சன் பதிவு செய்தார். 47 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 111 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. இதையடுத்து 298 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.