சென்னை: “ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா. இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அம்பேத்கருக்கு அவதூறு. இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் ஆகும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பாராட்டியும், கூட்டத்தொடர் முழுவதும் பாஜக அவையை முடக்கியதாகவும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கையின் விவரம் வருமாறு: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.