
இந்தியா தனது எல்லையை சீனா, நேபாளம், பூடான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. சிறிய நாடுகள் நம்மோடு நட்பாக இருந்தாலும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு அவ்வப்போது உரசல்கள் ஏற்படுகிறது. பாகிஸ்தான் நேரடியாக மோதிய போதெல்லாம் தோல்வியை தழுவியதால், இப்போது பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாக வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கூட காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே இருக்கும் பைசரான் புல்வெளியில் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டிருந்த அப்பாவி சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் 3 பேரும், அவர்களுக்கு ஆதரவான காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் மதத்தை கேட்டு நடத்திய துப்பாக்கி சூட்டினால் 25 சுற்றுலாப்பயணிகளும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த குதிரை ஓட்டி ஒருவரும் இன்னுயிரை நீத்தனர். இதையடுத்து இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இருந்து செல்லும் சிந்து நதி மற்றும் 2 நதிகளின் தண்ணீர் பாகிஸ்தானுக்கு கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தானும் பதிலுக்குப்பதிலாக சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆக, பாகிஸ்தானோடு உள்ள உறவில் கசப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி ஒருபக்கம் கசப்பான உறவு இருந்தாலும், மற்றொரு பக்கம் சீனாவுடன் உள்ள உறவில் கசப்புத்தன்மை மாறி இனிப்பு சுவை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இந்துக்கள், பவுத்தர்கள், சமணர்களுக்கு புனித பூமியான கைலாசமலை மற்றும் மானசரோவர் ஏரி இருக்கிறது. உலகில் புனிதமான மலைகளில் ஒன்றாக கருதப்படும் கைலாசமலை சிவபெருமானின் வசிப்பிடமாகவே இந்துக்களால் பெரிதும் போற்றப்படுகிறது. கைலாசமலைக்கு சென்று ஈசனை தரிசித்தால் சொர்க்கத்துக்கான வாசல் திறக்கப்படுவதாக ஐதீகம் உண்டு. மானசரோவர் ஏரி பிரம்மாவின் மனதில் காட்சிப்படுத்தப்பட்டு, பூமியில் அவரால் தோற்றுவிக்கப்பட்டதாக நம்பிக்கை இருக்கிறது. 'மானச' என்றால் மனம். 'சரோவரம்' என்றால் ஏரி. அதாவது பிரம்மாவின் மனதில் தோன்றியதால் உருவான ஏரி என்று பொருள்.
இந்த ஏரியில் புனித நீராடி, அதன் நீரை பருகினால் பாவங்கள் விடுபட்டு பெரும் புண்ணியம் கிடைக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இந்துக்களுக்கு உண்டு. இந்த கைலாசமலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கொரோனாவுக்கு பிறகும், லடாக் பகுதியில் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட உரசலுக்கு பிறகும் இந்தியாவில் இருந்து யாரும் புனித யாத்திரை செல்ல சீனாவால் அனுமதிக்கப்படவில்லை. இப்போது பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையே உள்ள நட்புறவின் காரணமாக இரு எல்லைப்புறங்களிலும் சில இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த படைகள் திரும்பப்பெறப்பட்டு உள்ளன. இரு நாடுகளின் பரஸ்பர பேச்சுவார்த்தை முடிவுகள் புத்துயிர் பெற்றுள்ளன. இப்போது கைலாசமலை - மானசரோவர் புனித யாத்திரைக்கு உத்தரகாண்டிலிருந்து லிபுலேக் கணவாய் வழியாக தலா 50 பேர் கொண்ட 5 குழுக்களும், சிக்கிமில் இருந்து நாதுலா கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகர்கள் கொண்ட 10 குழுக்களும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் செல்வதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். புனித யாத்திரைக்கு அனுமதி கொடுத்ததில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பாலம் திறக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.