
சென்னை,
சென்னை கோயம்பேடு -பட்டாபிராம் வரை ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 19 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள், 464 கோடியில் மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்புகளுடன் இந்த திட்டம் அமையவிருக்கிறது.
சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும் பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
இந்த அறிக்கையின் படி, கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது. இது அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் அம்பத்தூர் ஓ.டி. ஆவடி ரெயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.76 கி.மீ. ஆகும்.