இந்தியாவுக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன் - ரஹானே பேட்டி

12 hours ago 5

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான ரஹானே செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லை என 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

சீனியர் வீரரான ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் ஆன ரஹானே கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடினார். அதன்பின்னர் எந்தவித தொடருக்காகவும் இந்திய அணியில் இடம் பிடிக்காக ரஹானே ஐ.பி.எல். தொடரில் ஆடி வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவுக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக ரஹானே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன். அதற்கான ஆசை, பசி, ஆர்வம் எல்லாம் இன்னும் உள்ளது. உடல் ரீதியாக நான் இன்னும் தகுதியுடனே இருக்கிறேன். தற்போதைகு நான் ஒரு போட்டியை மட்டும் கவனம் செலுத்துகிறேன்.

ஐ.பி.எல். தொடரில் நன்றாக விளையாட வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என பின்னர் பார்த்துகொள்ளலாம். நான் எப்போதும் விடாமுயற்சியுள்ள ஒரு நபர். பீல்டிங்கில் என்னுடைய சிறந்தவற்றை அளிக்க முயற்சிப்பேன். அது 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். என்னால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதில்தான் நான் கவனம் செலுத்துவேன்.

உள்ளூர் கிரிக்கெட்டில் எப்போதும் விளையாடுவேன். தற்போது மகிழ்ச்சியாக ஆடி வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவதை விட சிறந்தது எதுவும் இல்லை. இந்திய அணியின் நிறம் பதித்த உடையில் மீண்டும் விளையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article