ஜோகன்ஸ்பர்க்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிவில் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முன்னதாக மழை பெய்த காரணத்தால் இந்த போட்டி 47ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 47 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 101 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவர்களில் அனைத்து விக்கெடையும் இழந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 81 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.