ஒருநாள் கிரிக்கெட்: ஐ.சி.சி. முக்கிய முடிவு எடுக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

4 hours ago 1

சென்னை,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா மட்டும் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. மேலும் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகள் டி20 அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்குள் (2027) ஒருநாள் கிரிக்கெட்டை காப்பாற்ற ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போட்டிக்கு முன்பு வரை ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏதேனும் வருங்காலம் இருக்கிறதா? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேர்மையுடன் பேச வேண்டும். 4 மணி நேரத்திற்குள் முடிந்து விடும் டி20 போட்டிகள் ரசிகர்களை கவர்கிறது. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் வளர்வதற்கு உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் முக்கியம்.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தப் போட்டியும் இல்லை. 2013 - 2014 காலகட்டங்களில் ஒரு பந்தை மட்டும் வைத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. அதன் பின் 2 புதிய பந்துகள், உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் போன்ற விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அது பல வகைகளிலும் இந்திய ஸ்பின்னர்களின் தாக்கத்தைக் குறைக்கிறது என்பது என்னுடைய கருத்து.

அதே காரணத்தால் ரிவர்ஸ் ஸ்விங் தற்போது முற்றிலுமாக சென்று விட்டது. விரல் ஸ்பின்னர்களின் தாக்கம் குறைந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக்கோப்பை ஐ.சி.சி.க்கு சவாலாக இருக்கும். அந்த தொடருக்கு முன் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏனெனில் ஒருநாள் போட்டிகள் மெதுவாக செல்கிறது. என் மனதில் ஒரு கேள்வி உள்ளது. இன்றைய கால கட்டத்தில் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு இடம் இருக்கிறதா?" என்று கூறினார்.

Read Entire Article