சாம்பியன்ஸ் டிராபி; இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

3 hours ago 1

கராச்சி,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து (பி பிரிவு) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதனைதொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர், தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 179 ரன்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 37 ரன் எடுத்தார்.

அபாரமாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், முல்டர் தலா 3 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களம் கண்டனர். இதில் ஸ்டப்ஸ் ரன் எடுக்காமலும், ரிக்கெல்டன் 27 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து வான் டெர் டுசென் மற்றும் கிளாசென் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கிளாசென் 64 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் பி-பிரிவில் 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறியது.

Read Entire Article