அவர் உண்மையான உத்வேகம் - விராட் கோலிக்கு பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது புகழாரம்

3 hours ago 1

லாகூர்,

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வந்த அவர் இந்த முக்கியான போட்டியில் சதத்தை அடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்தார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் இளம் வீரர் அப்ரார் அகமது 10 ஓவர்கள் வீசி வெறும் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன் சுப்மன் கில்லின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனால் அவரை விராட் கோலி களத்திலேயே பாராட்டினார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் தம்முடைய இளம் வயது ஹீரோ விராட் கோலிக்கு பந்து வீசியதாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி சிறந்த கிரிக்கெட்டர் என்பதற்கு நிகராக நல்ல மனிதர் என்றும் அப்ரார் அகமது புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "எனது இளம் வயது ஹீரோ விராட் கோலிக்கு பந்து வீசினேன். அவருடைய பாராட்டுக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். கிரிக்கெட்டராக அவருடைய மகத்துவம் ஒரு மனிதராக அவருடைய பணிவுக்கு பொருத்தமாக இருக்கும். களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் உண்மையாக உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியவர்" என்று பதிவிட்டுள்ளார். 

Read Entire Article