டெல்லி: குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு வரமாக விளங்கும் வாடகைத் தாய்கள் சந்திக்கும் உடல் மற்றும் மன ரீதியிலான பிரச்னைகள், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பண உதவிகள், பிரசவ காலம் முடிந்த பிறகான அவர்களது பிரச்னைகள் பற்றி மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர் சாவித்திரி தாக்கூர் அளித்த பதில்: வாடகைத் தாய்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கென ‘வாடகைத்தாய் சட்டம் – 2021’ அமலில் இருக்கிறது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளின் வேண்டுகோளுக்கிணங்க வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்கும் உன்னதமான பணியைச் செய்ய முன்வரும் ஏழைப் பெண்களை ஏமாற்றாமல், அவர்களுக்குரிய பணப்பலன் மற்றும் உடல்நலன் சார்ந்த விஷயங்களை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது. புனிதமான இந்த வாடகைத் தாய் விஷயம் வியாபார மயமாக்கப்படாமல் இருக்கவும், பாதுகாப்பான மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறைகளை நாடு முழுக்க அமல்படுத்தும் வகையிலும் சட்டப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் மற்றும் வாடகைத் தாய் ஆகியோருக்கான சட்ட ரீதியான மற்றும் மருத்துவ ரீதியான தேவைகளை இந்த சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் உறுதி செய்கின்றன. குழந்தையை சுமக்க ஆரம்பிக்கும் காலம் முதல் பிரசவ காலத்திற்குப் பின்பும் சுமார் 36 மாதங்கள் வாடகைத் தாய்க்கு மருத்துவக் காப்பீடு அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், சிகிச்சைகள், மருத்துவ செலவுகள், பிரசவகால சிக்கல்களை சமாளித்தல், அவருக்கு ஏற்படும் இடைக்கால இழப்புகள், உயிரிழப்பு உள்ளிட்ட எல்லா வகையான விஷயங்களும் இந்தக் காப்பீட்டுக்குள் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடகைத் தாய் சந்திக்கும் பிரச்னைகளுக்கேற்ப தகுந்த இழப்பீடு பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாடகைத்தாய்க்கு மனநலம் மற்றும் உடல்நலம் நன்றாக இருப்பதை உறுதி செய்தபின்பு, மகப்பேறு காலத்தில் எந்த சூழலில் கருக்கலைப்பு செய்யலாம்; செய்யக் கூடாது என்பதையும்; குழந்தை பிறந்த பின்பு அந்தக் குழந்தைக்கு எந்த வகையிலும் எப்போதும் உரிமை கோரக் கூடாது என்பதையும்; வாடகைத் தாய்களை ஏமாற்றும் அல்லது வஞ்சிக்கும் செயல்களுக்கு உரிய தண்டணை அளிபதையும் இந்த சட்டத்தின் பிரிவுகள் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளன.
மிக முக்கியமாக வாடகைத் தாயாக இருக்க விரும்பும் ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அப்படி இருக்க முடியும் என்பதை இந்தச் சட்டம் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இந்த விஷயம் வணிகமயமாவது தடுக்கப்படுகிறது. இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து, வாடகைத் தாய்களின் உரிமைகள் மற்றும் உடல்நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. இவ்வாறு அமைச்சர் சாவித்திரி தாக்கூர் பதிலளித்தார்.
The post ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும்: டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.