மாங்குயில், பனங்காடை, கள்ளப்புறா: பெரம்பலூரில் நடந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட பறவைகள்

3 hours ago 2

பெரம்பலூர்: தமிழ்நாடு முழுவதும் சரணாலயம், ஆறு, ஏரி, குளங்களில் ஈரநில பறவைகள், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 கட்டமாக நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஏரிகளில் வனத்துறை சார்பில் ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 9ம் தேதி நடந்தது. மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்படி வனச்சரகர்கள் பெரம்பலூர் பழனிகுமரன், வேப்பந்தட்டை சுதாகர், சோமசுந்தரம், சமூக காடுகள் முருகானந்தம் ஆகியோர் இந்த பணியை மேற்கொண்டனர். குரும்பலூர் ஏரி, துறைமுகம் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் ஏரி, அரும்பாவூர் சித்தேரி, பெரிய ஏரி, பூலாம்பாடி ஏரி, வெங்கலம் ஏரி, எசனை ஏரி, அத்தியூர் ஏரி, கீழப்புலியூர் ஏரி, எழுமூர் ஏரி, ஒகளூர் ஏரி, சிறுவாச்சூர் ஏரி உள்ளிட்ட 20 ஏரிகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது.

இதைதொடர்ந்து 2ம் கட்டமாக கடந்த 16ம் தேதி லாடபுரம் மயிலூற்று அருவி மற்றும் பெரம்பலூர், குரும்பலூர், தொண்டமாந்துறை, பூஞ்சோலை, வேப்பந்தட்டை, வெங்கலம், சந்திரமனை, சிறுவாச்சூர், பேரளி, குன்னம், சித்தளி, மங்கலம், அயன்பேரையூர் உள்ளிட்ட 20 பகுதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. ஒருங்கிணைப்பாளர்களாக வனச்சரகர்கள் பழனிகுமரன், சுதாகர், சோம சுந்தரம், சமூக காடுகள் முருகானந்தன், வனவியல் விரிவாக்க மைய விளம்பர அலுவலர் சங்கரேஸ்வரி (எ) நாகஜோதி செயல்பட்டனர்.

இந்த கணக்கெடுப்பு பணிகளில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் வினோத் குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள், வேப்பந்தட்டை அரசு கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள், குரும்பலூர் அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், வனத்துறையை சேர்ந்த வானவர்கள், வன காப்பாளர்கள் ஈடுபட்டனர். இதில் மாங்குயில், பனங்காடை, தேன்சிட்டு, மைனா, கள்ளப்புறா, கவுதாரி உள்ளிட்ட பல வகையான பறவைகள் அடையாளம் கண்டறியப்பட்டது.

இதில் ஒரு சில இடங்களில் வெளிநாட்டு வகை பறவைகளும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி, 2ம் கட்டமாக நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் கண்டறியப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்படும் என்றார்.

The post மாங்குயில், பனங்காடை, கள்ளப்புறா: பெரம்பலூரில் நடந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட பறவைகள் appeared first on Dinakaran.

Read Entire Article