நாகர்கோவில்: கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகளை குமரி எல்லைகளில் கொட்டப்படுவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், தற்போது கேரளாவில் இருந்து தெரு நாய்களை குமரியில் எல்லையில் கொண்டு விடும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து இன்று 20-க்கும் மேற்பட்ட நாய்களை குமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வேனில் ஏற்றிக் கொண்டு விட ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் நாய்களை அந்த கும்பல் அவிழ்த்து விட்டுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வாகனத்தை மடக்கி பிடித்து அவர்களை சிறை பிடித்தனர். மேலும் அவர்களால் அங்கு விடப்பட்ட தெரு நாய்களை அவர்களை வைத்து மீண்டும் பிடிக்க வைத்தனர்.