சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்தியாஷ்ரம், குமார ராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று நடந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு செய்தி மடல், 2025 ஆண்டு நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி ஆகியவற்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. பொறியாளர்களிடையே ஒருமித்த மனப்பான்மையை வளர்க்க வேண்டும், பொறியாளர்களின் சேவை மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும். புதிய உதவிப் பொறியாளர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களின் மனவலிமையை ஊக்குவிக்க வேண்டும். பொறியாளர்களின் திறனை வளப்படுத்த தொழில்நுட்ப விரிவுரைகள், கருத்தரங்குகள், மாநாடு ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மனித உறவுகளை வளப்படுத்த தேவையான கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலா போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும்.
தங்கம் செய்ய முடியாததை சங்கம் செய்யும் எனவும், ஒரு கையை தட்டினால் ஓசை எழாது, இரண்டு கைகளாலும் தட்டும்போது தான் ஓசை எழும், தனி மரம் தோப்பு ஆகாது என்பது ஒரு பழமொழி. சங்கம் என்பது தனித்தனி மனிதர்களின் குரலை ஒருங்கிணைக்க கூடிய பணியை செவ்வனே செய்ய வேண்டும். அனைவரும் ஒன்று சேரும் போதுதான் எதையும் சாதிக்க முடியும். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்கத்தினை வலுப்படுத்த வேண்டும்.
உதவி பொறியாளர்கள் புதியதாக பணியில் சேரும்போது தற்போது நவீன தொழில்நுட்பத்தில் பயின்று திறமையானர்வகளாக உள்ளனர்.
இன்றைக்கு தொழில்நுட்ப பாடத்திட்டம் போன்ற எல்லாவற்றிலும் மாற்றம் வந்துள்ளது, அதற்கேற்ப பொறியாளர்களின் திறமையும் வளர்ந்துள்ளது. உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் என அனைவரும் ஒன்றாக சேரும்போதுதான் எதையும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, மண்டல தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஒரு கையை தட்டினால் ஓசை எழாது இரண்டு கைகளாலும் தட்டும்போதுதான் ஓசை எழும், தனி மரம் தோப்பு ஆகாது: பொறியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.