சென்னை : தமிழ்நாட்டில் ஐபோன் தொடர்பாக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூரில் உள்ள அதன் புதிய உற்பத்தி நிலையத்தில் ஐபோன் மாடல்களை தயாரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே ஃபாக்ஸ்கான் நிறுவனம் தைவான் நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையில் ஐபோன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது.
இந்த நிலையில், சென்னை ஒரகடத்தில் ஐபோன்களை தயாரிக்கும் மேலும் ஓர் ஆலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைக்கிறது. ரூ.12,870 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் புதிய ஆலையில் ஐபோன் டிஸ்ப்ளே இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கிலாந்தின் லண்டன் பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ள தகவலில் ஃபாக்ஸ்கான் புதிய ஆலை பற்றி குறிப்பிட்டுள்ளது.
ஃபாக்ஸ்கான் தனது இந்திய அலகான யூசான் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டில் ரூ.12,870 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. ஒரகடத்தில் அமையும் ஐபோன் டிஸ்ப்ளே அசம்பிளி ஆலையில் 14,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கானின் புதிய ஆலை மூலம் ஐபோன்கள் தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஒரகடத்தில் ரூ.12,870 கோடியில் புதிய ஐபோன் ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம் : 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு!! appeared first on Dinakaran.