டெல்லி: “சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. டெல்லியில் அவர்களது இல்லத்தில் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் ஒரு சிறப்பான அரவணைப்பு கிடைக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 23) புதுடெல்லி சென்றடைந்தார். பின்னர், காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியையும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.