அரியலூர் அரசு மருத்துவமனையில் பயங்கரம்; கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண் கோப்பையில் முக்கி கொடூரமாக கொன்றார்: பரபரப்பு தகவல்கள்

4 hours ago 3

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண், அந்த குழந்தையை கழிவறை கோப்பையில் முக்கி கொடூரமாக கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ்(53). கூலித்தொழிலாளி. இவரது மகள் லாரா(20). திருமணமாகவில்லை. இந்நிலையில் வேதியராஜ் எலும்பு முறிவு சிகிச்சைக்காக கடந்த 5 நாட்களுக்கு முன் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை உடனிருந்து கவனிப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா நேற்று முன்தினம் வந்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாரா சென்றார். உடன் சென்ற அவரது தாய் வெளியே காத்திருந்தார். அப்போது தூய்மைப்பணியாளர்கள், தூய்மை பணி மேற்கொள்ள கழிவறைக்கு சென்றனர்.

அங்குள்ள ஒரு கழிவறையை தூய்மை செய்ய திறக்க முயன்றபோது திறக்க முடியவில்லை. உள்ளே ஆள் இருப்பார்கள் என்று காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்காததால், கதவை தட்டினர். உள்ளிருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகமடைந்த தூய்மை பணியாளர்கள் இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்களிடம் கூறினர். தொடர்ந்து மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, லாரா ரத்தம் தோய்ந்த ஆடையுடன் லேசான மயக்க நிலையில் இருந்தார். மருத்துவமனை ஊழியர்களும், போலீசாரும் அவரை உடனே சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் கழிவறையை சோதனை செய்த போது, கழிவறை கோப்பைக்குள் திணித்த நிலையில் பச்சிளம் பெண் சிசு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள், அதனை டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி அரியலூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் கழிவறை கோப்பையை உடைத்து சிசு உடலை எடுத்தனர். இதையடுத்து சிசு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதற்கிடையே லாரா அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் உடல் பாதிக்கப்பட்டு இருந்ததால் போலீசார் அவரை பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிரசவ வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரியலூர் நகர போலீசார், லாராவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருமணமாகாத லாரா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இது பெற்றோருக்கு தெரியவில்லை. இந்நிலையில் தந்தையை கவனிக்க வந்தபோது லாராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கழிவறைக்கு சென்றார்.

அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் கோப்பையில் திணித்து கொன்றுள்ளார். லாரா கழிவறைக்கு சென்றபோது அவரது தாயும் உடன் சென்றுள்ளார். அவர் சுமார் 3 மணி நேரம் வெளியில் காத்திருந்தார். ஆனால் அவர் மகளை தேடி கழிவறைக்கு செல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகள் கர்ப்பிணியாக இருந்தது அவருக்கு தெரியுமா, சிசுவை கொல்ல அவரும் உடந்தையாக இருந்தாரா, லாராவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இன்று காலை டிஎஸ்பி ரகுபதி, லாராவிடம் விசாரணை நடத்தினார்.

The post அரியலூர் அரசு மருத்துவமனையில் பயங்கரம்; கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண் கோப்பையில் முக்கி கொடூரமாக கொன்றார்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article