நெல்லை – தென்காசி பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில்வே நிர்வாகம் தகவல்

6 hours ago 4

நெல்லை: திருநெல்வேலி – தென்காசி மார்க்கத்தில் செல்லும் பாசஞ்சர் ரயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மே 25 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் இருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி, வரும் 25.05.2025 (ஞாயிறு) முதல் நெல்லையில் இருந்து மாலை 6:20 மணிக்கு தென்காசி மார்க்கமாக புறப்படும் (வண்டி எண்: 56737) பயணிகள் ரயிலிலும், அதே நாளில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு நெல்லை மார்க்கமாக புறப்படும் (வண்டி எண்: 56738) பயணிகள் ரயிலிலும் கூடுதலாக தலா 2 பெட்டிகள் இணைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து, வரும் 28.05.2025 (புதன்) முதல், செங்கோட்டையில் இருந்து காலை 6:40 மணிக்கு நெல்லை மார்க்கமாக புறப்படும் (வண்டி எண் 56736) பயணிகள் ரயிலிலும், அன்றைய தினமே நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு தென்காசி மார்க்கமாக புறப்படும் (வண்டி எண் 56735) பயணிகள் ரயிலிலும் கூடுதலாக தலா 2 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பால், தினசரி இந்த மார்க்கத்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர் மிகுந்த பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

The post நெல்லை – தென்காசி பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில்வே நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article