வடலூர், பிப். 10: கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் பேருந்து நிலைய திடல் எதிரில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனையான நிதிப்பகிர்வு, தமிழ்நாட்டில் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நேற்றுமுன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசியதாவது:
கட்சி ஆரம்பிக்கும் போது பெரியாரை பற்றி புகழ்ந்து பேசியவர்கள், இன்று அவதூறாக எதிர்த்து பேசி வருகிறார்கள். அதன் விளைவாக தான் ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்காமல் மக்கள் தகுந்த அடி கொடுத்துள்ளனர். பட கம்பெனி பீஸ் போனதால் அரசியல் படத்துக்கு வருகிறார்கள். ஆனால் இங்கும் பீஸ் போய் விட்டது. சினிமாவில் உள்ள ஒரு நாள் முதல்வர் போல் நினைத்து கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள்.
இந்த நிதி நெருக்கடியிலும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை 90% நிறைவேற்றி உள்ளோம். ஒரு காலத்தில் பெண்கள் வாக்கு அதிமுகவிற்கும், ஆண்கள் வாக்கு திமுகவிற்கும் என கூறுவார்கள். ஆனால் இன்று பெண்களின் வாக்கு நமக்கு தான் கிடைக்கிறது. அதற்கு காரணம் பெண்களுக்கு பல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். இதனால் தமிழகத்தில் சுமார் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஒன்றிய அரசு திருக்குறள் வாசிப்பதோடு சரி. பட்ஜெட்டில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தை பற்றி பட்ஜெட்டில் பேசுவதே இல்லை. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை. வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை. வாயை திறந்தாலே பொய் பேசிக்கொண்டு திரிந்து வருகிறார். இவருடன் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து கொண்டு பொய்களை கூறி வருகிறார். இதுபோன்ற பொய்கள் எல்லாம் வாட்ஸ் அப்பில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1026 கோடி இதுவரையில் நிவாரணம், இந்த ஆட்சியில் தான் வழங்கப்பட்டு உள்ளது. தூக்கத்தை மறந்து மக்களுக்காக முதல்வரும், அவருடன் நாங்களும் சேர்ந்து உழைத்து வருகிறோம். வடலூரில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தோம்.
சொன்னது போல் ரூ.100 கோடியில் சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்றது. அதையும் திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் நீதிமன்றத்திற்கு சென்று தடுத்து நிறுத்தி வருகிறார்கள். மேலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் சர்வதேச மையம் அமைக்கப்படும். நமது தமிழக முதல்வர் ஓய்வின்றி மக்களுக்காக உழைத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஒன்றிய அரசு திருக்குறள் வாசிப்பதோடு சரி பட்ஜெட்டில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு appeared first on Dinakaran.