சென்னை: ஒன்றிய அரசு தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், மக்கள் மன்றத்தில் நாளுக்கு நாள் மரியாதையை இழக்கும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பெரியார் மண்ணில் நாம் பெரு வெற்றி பெற்றுவிட்டோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில், கழகத்தை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசிற்கு எதிராக, இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் நாம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசின் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கை, வெற்று அறிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எதுவும் இல்லை.
உழவர்கள் 4 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் முக்கியக் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலைக்கான அறிவிப்பு இதில் இல்லை, கல்விக்கு மொத்தமே 2.3 விழுக்காடுதான் ஒதுக்கி இருக்கிறார்கள், சுகாதாரத்துக்கு மொத்தமே 1.8 விழுக்காடுதான் ஒதுக்கி இருக்கிறார்கள், பாதுகாப்புத் துறைக்கு 4.91 லட்சம் கோடி ரூபாயும், உள்துறைக்கு ரூ.2.33 லட்சம் கோடி கொடுத்தவர்கள் சமூகநலத் துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் தான் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் வளர்ச்சியில் இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?
பட்டியல் – பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடும் குறைவு, புதிய வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 விழுக்காடு அதிகப்படுத்தியது மூலமாக எல்.ஐ.சி.யை ஒழிக்க முயற்சி செய்கிறார்கள், உர மானியத்தைக் குறைத்துவிட்டார்கள், பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியத்தைக் குறைத்துவிட்டார்கள். இந்த நிதிநிலை அறிக்கையின் மிகப்பெரிய சலுகையாக அவர்கள் சொல்வது, ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்திய நாட்டின் மக்கள்தொகை 140 கோடி அதில், 2 விழுக்காட்டுக்கும் குறைவான மக்களுக்கான சலுகைதான் அது இதையே பெரிய சாதனையாக காட்டுகிறார்கள். தமிழ்நாட்டிற்கான புதிய சிறப்புத் திட்டம் உண்டா? இல்லை, தமிழ்நாட்டிற்கான புதிய ரயில்வே திட்டம் உண்டா? இல்லை, ரயில்வே திட்டங்களுக்கான நிதியாவது அதிகம் கொடுத்தார்களா? இல்லை, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி உண்டா? இல்லை, பெஞ்சல் புயலுக்கு இழப்பீடு உண்டா? கிடையாது.
மிக்ஜாம் புயலுக்கு இழப்பீடு உண்டா? அதுவும் கிடையாது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உண்டா? கிடையவே கிடையாது, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கு நிதி இருக்கிறதா? இல்லை, குடிநீர்த் திட்டத்திற்கும் இல்லை, வீடுகட்டும் திட்டத்திற்கும் இல்லை எதை எடுத்தாலும் இல்லை இதற்குப் பெயர் பட்ஜெட்டா? நீங்கள் நிதியைக் கொடுக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம், நீங்கள் வேண்டும் என்றால் வஞ்சிப்பவர்களாக இருக்கலாம், ஆனால், நாங்கள் வாழ வைப்பவர்கள்.
ஒரு ஆளுநராக நீங்கள் அனுப்பினீர்களே ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழ் முன்னோர்களை, தமிழ் மொழியை அவமானப்படுத்துவதையே வழக்கமாக வைத்துக் கொண்டு செயல்படுகிறார். ஆண்டுக்கு ஒரு முறை அவைக்கு வந்து மாநில அரசு தயாரித்து தரும் அறிக்கையைப் படிக்க வேண்டியது தான் ஆளுநருக்கு இருக்கும் ஒரே வேலை அதைக் கூட செய்யாமல், முரண்டு பிடிக்கிறார். மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்கிற உண்மையை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?.
தமிழ்நாட்டில் நாம் செய்து வரும் வளர்ச்சிப் பணிகளை எந்தக் கொம்பனாக இருந்தாலும் தடுக்க முடியாது. இங்கு பக்தி என்றைக்குமே மதவெறியாக மாறாது. அதனால்தான், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று வன்முறைக் காடாக இல்லாமல், அமைதிப் பூங்காவாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்த அமைதியைச் சில சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு நியாயமாக வர வேண்டிய நிதியைக் கொடுக்க மாட்டீர்கள். பேரிடர் நேரத்தில் கூட உதவி செய்ய மாட்டீர்கள்.
ஆனால், எங்கள் மாநிலத்தின் அமைதியை மட்டும் கெடுக்க நினைப்பீர்களா? நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள், திருந்துங்கள், இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறேன். ஒன்றிய அரசு தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், மக்கள் மன்றத்தில் நாளுக்கு நாள் மரியாதையை நீங்கள் இழப்பீர்கள். கும்பமேளாவிற்கு வாருங்கள் என்று பக்தர்களை அழைத்தீர்களே, அவர்களுக்குப் பாதுகாப்பு தந்திருக்க வேண்டியது பா.ஜ. அரசின் கடமை இல்லையா? உங்கள் மதவாத அரசியல் ஏன் மவுனம் ஆகிவிட்டது?
அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்கள் கையிலும், காலிலும் விலங்கு மாட்டி ராணுவ விமானத்தில் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பேட்டி கண்ணீர் வரவைப்பதாக இருக்கிறது. இது தொடர்பாக, அமெரிக்க அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடந்ததை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளிக்கிறார். இதுதான் இந்தியர்களைக் காப்பாற்றும் லட்சணமா?
ஒன்றிய பா.ஜ. அரசிற்கும் கடந்த காலத்தில் கொத்தடிமைத் தனத்தால் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடகு வைத்த அ.தி.மு.க.விற்கும் ஒட்டுமொத்தமாகப் பாடம் புகட்டும் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் அமைய இருக்கிறது. ஏழாவது முறையும் ஆட்சியை அமைத்து ஏற்றம் காண்போம். தி.மு.க. என்றென்றும் மாநில உரிமைகளுக்கான போராளி, இன்றைக்கு நாங்கள் முன்மொழிவதை, நாளைக்கு இந்தியாவே வழிமொழியும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் அமைச்சர்கள் ஆவடி நாசர், மாவட்டச் செயலாளர் சந்திரன், எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், ஆவடி மேயர் உதயகுமார், பொறுப்பாளர் சண்.பிரகாஷ், வடக்கு பகுதி செயலாளர் நாராயணபிரசாத், திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கெஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* ‘ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும்’
என்னைக் கேட்டால் ஆர்.என். ரவி தான் தொடர்ந்து ஆளுநராக இருக்க வேண்டும். அவர் இருந்தால் தான் நமக்கு வேகம் வருகிறது. நான் பல நேரங்களில் சொல்லியிருக்கிறேன். 2026 வரை மட்டுமல்ல, திமுக ஆட்சிக்காலமெல்லாம் அவர்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு வசதி, அவரே நமக்குப் பெரிய பிரசாரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
அடுத்து இன்னொருவர் இருக்கிறார் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை. அவரும் தொடர்ந்து இருக்க வேண்டும். இவர்கள் இரண்டு பேர் இருந்தால் போதும் நாம் பிரசாரம் செய்யத் தேவையில்லை. அவர்களே பிரசாரம் செய்து நமது ஆட்சியை மீண்டும் மீண்டும் கொண்டுவந்து தமிழ்நாட்டில் உட்கார வைத்துவிடுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post ஒன்றிய அரசு தன் மனப்பான்மையை மாற்றாவிட்டால் மக்கள் மன்றத்தில் மரியாதையை இழக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.