மதுரை : ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார் அதில்,” ரூ.1.7 கோடி கடனை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி திருச்சி கனரா வங்கி நிர்வாகம் வீட்டிற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டது. மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.,) நீதிபதி விடுப்பில் சென்றுள்ளார். கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. கேரளா எர்ணாகுளத்திலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தை அணுகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்ல இயலாததால் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எனவே திருச்சி கனரா வங்கியின் ஏல நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், “இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடன் மீட்பு தீர்ப்பாய விவகாரத்தில் ஒன்றிய நிதித்துறை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்ப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், “ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சென்னை, கோவை, மதுரையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் செயல்படுவதாக தெரியவில்லை. எர்ணாகுளம் செல்ல கூறுவது ஏற்கத்தக்கதல்ல; ஒன்றிய அரசின் செயல்பாடு கடன் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது. கடன் தீர்ப்பாயத்தின் அலுவலர் விடுப்பில் சென்றால், அவரின் பணிகளை எவ்வாறு சமன் செய்வது என்பதற்கான மாற்று வழிகளை எடுப்பதிலும் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கடன் தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் எத்தனை? அவற்றை நிரப்புவதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக ஒன்றியநிதித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து appeared first on Dinakaran.