கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றம்

3 hours ago 2

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தார். இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், குற்றவாளிகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதாவில், இந்த சட்டம், வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களைத் தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், வங்கிகளுக்கும், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்களுக்கும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டப் பேரவையில் நேற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதா மீது நடந்த விவாதம் வருமாறு:

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு கடன்களை ஏழை எளியவர்களுக்கு பெருமளவில் வழங்கினால் அவர்கள் தனியாரிடம் கடன் வாங்கமாட்டார்கள். சுய உதவிக் குழுக்களும் அதிகமாக பலப்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ற திருத்த மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): கடன் வாங்கியவர்களிடம் கூலிப்படையை அனுப்பி நெருக்கடிக்கு உள்ளாக்கி கடனை வசூலிக்கு நிலை இனி மாறும். இந்த மசோதாவை வரவேற்கிறேன்.

சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஏழை மக்களின் பாதுகாப்பு அரணாக இந்த சட்டம் இருக்கும். பதிவு செய்யப்படாத சீட்டுக் கம்பெனிகளையும் இந்த சட்டத்தில் சேர்க்க வேண்டும். இதற்கான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை நியமிக்க வழிவகை செய்ய வேண்டும்.

தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): சரியான நேரத்தில் இந்த சமூக கொடுமைக்கு சட்டத்தின் மூலம் கடிவாளம் போடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை வரவேற்கிறோம்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): காலத்திற்கு ஏற்ற சட்ட மசோதா இது. கடனை வசூலிக்க சமூக விரோதிகளை வைத்து மிரட்டாமல், இனி சட்ட ரீதியாக அணுக வேண்டும். இந்த சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அதிக கடன் வழங்கினால் மக்களுக்கு நல்வாய்ப்பாக அமையும். அதற்கேற்ற திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

அவர்களுக்கு பதிலளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘எம்எல்ஏக்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள் ஆய்வு செய்யப்படும். இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய ஆலோசனையை பின்பற்றி, அந்த மசோதாவில் உள்ள ‘வங்கிகள்” என்ற வார்த்தை மட்டும் நீக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

இதை தொடர்ந்து அந்த மசோதா, எம்எல்ஏக்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். கவர்னர் ஒப்புதல் அளித்ததும் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்படும். வங்கிகள் என்ற வார்த்தையை அதிலிருந்து நீக்கியுள்ளதால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மீது இந்த சட்டம் பாயாது என்று கூறப்படுகிறது.

 

The post கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article