இதர கட்சியினருக்கு பேச கூடுதல் வாய்ப்பு சட்டப்பேரவை 168 மணி 56 நிமிடம் நடந்தது: பார்வையாளர்கள் மாடத்தில் 23,221 பேர் நிகழ்வுகளை பார்த்துள்ளனர், சபாநாயகர் அப்பாவு தகவல்

2 hours ago 2

சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: 16வது பேரவையின் 7வது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் 6-1-2025 அன்று தொடங்கி 11-1-2025 வரை நடைபெற்றது. ஏழாவது கூட்டத்தொடரின் இரண்டாம் கூட்டம் 14-3-2025 முதல் நேற்று வரை நடந்தது. பேரவை மொத்த நாட்கள் (ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட) 36 நாட்கள் நடந்தது. அவைக் கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் 168 மணி 56 நிமிடங்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்ற மொத்த நாட்கள் 5 நாட்கள். உரையாற்றிய உறுப்பினர்கள் 25 பேர். உரையாற்றிய நேரம் 8 மணி 31 நிமிடங்கள்.

அதில் ஆளுங்கட்சியினர் 12 பேர்  பேசிய நேரம் 2 மணி 31 நிமிடங்கள். இதர கட்சியினர் 13 பேர்  பேசிய நேரம்  6 மணி. இதர கட்சியினருக்குக் கூடுதலாக 3 மணி 29 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல்வர் பதிலுரை ஆற்றிய நேரம் 38 நிமிடங்கள். நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்ற நாட்கள் 5 நாட்கள். பங்கேற்ற உறுப்பினர்கள் 31 பேர். உரையாற்றிய நேரம் 12 மணி 31 நிமிடங்கள்.

அதில் ஆளுங்கட்சியினர் 16 பேர்,  பேசிய நேரம்  4 மணி 14 நிமிடங்கள். இதர கட்சியினர் 15 பேர்  பேசிய நேரம்  8 மணி 17 நிமிடங்கள். இதர கட்சியினருக்குக் கூடுதலாக 4 மணி 13 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பதிலளித்த நேரம் 55 நிமிடங்கள். வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் பதிலளித்த நேரம் 24 நிமிடங்கள். மானியக் கோரிக்கைகள் விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்ற மொத்த நாட்கள் 23 நாட்கள்.

உரையாற்றிய உறுப்பினர்கள் 169. உரையாற்றிய நேரம் 49 மணி 19 நிமிடங்கள். அதில் ஆளுங்கட்சியினர் 78 பேர் 18 மணி 1 நிமிடம். இதர கட்சியினர் 91 பேர் 31 மணி 18 நிமிடங்கள். இதர கட்சியினருக்குக் கூடுதலாக 13 மணி 17 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல்வர் தனது பொறுப்பில் உள்ள துறைகள் சம்பந்தமாக பதிலளித்த நேரம் 38 நிமிடங்கள். தனது பொறுப்பிலுள்ள துறைகள் மட்டுமல்லாமல் இதர துறைகள் தொடர்பான விவாதங்களிலும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உடனுக்குடன் முதல்வர் விளக்கம் அளித்த நேர்வுகள் 14 முறை 15½ நிமிடங்கள்.

அமைச்சர்கள் பதிலுரையாற்றிய மொத்த நேரம் 23 மணி 29 நிமிடங்கள். வினாக்கள்-விடைகள் எடுத்துக் கொள்ளப்பெற்ற மொத்த நாட்கள் 26, வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்பட்ட நாட்கள் 26, நீட்டிக்கப்பட்ட மொத்த நேரம் 7 மணி 39 நிமிடங்கள். அவசரத்தன்மை வாய்ந்த மிக முக்கியமான பொருட்கள் குறித்த சிறப்புக் கவன ஈர்ப்பு என்ற வகையில் அவையில் எடுத்துக்கொள்ளப்பெற்றவை 8. முதல்வர் பதிலளித்தவை 3. உரையாற்றிய உறுப்பினர்கள் 66.

எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த நேரம்  5 மணி 12 நிமிடங்கள். விதி 110-ன்கீழ் அமைச்சர்களின் அறிக்கைகள் மொத்தம் அளிக்கப்பெற்றவை 6. முதல்வர் அளித்தவை 6. பார்வையாளர்கள் மாடத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 23,221. ஆண்கள் 18,607, பெண்கள் 4,614. இவ்வாறு அவர் பேசினார்.

* தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் (மார்ச்) 14-ம் தேதி தொடங்கியது. அதன்படி மார்ச் 14ம் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, மார்ச் 15ம் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து மார்ச் 24ம் தேதி மானிய கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்புக்கான சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் தொடர்ந்து நேற்று (29ம் தேதி) பிற்பகல் 3.15 மணி வரை நடைபெற்றது. இந்த சட்டப்பேரவையின் கடைசி நாளான நேற்று காவல், தீயணைப்பு துறை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

அவர் காலை 9.38 மணிக்கு பதில் அளிக்க தொடங்கி, காலை 10.16 மணிக்கு (38 நிமிடங்கள்) பேசி முடித்தார். பின்னர் இறுதியில் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் கூடும் நாள் அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாபு அறிவித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து விடைபெற்று சென்றனர்.

* அதிக கேள்விகள் கேட்ட 5 பேர்…
அவையில்  அதிக அளவு மூல வினா கேட்ட உறுப்பினர்களில் முதல் ஐந்து நிலைகளில்  பொ.அர்ஜுனன், சபா. ராசேந்திரன், எஸ்.ஆர்.ராஜா, த.இனிகோ இருதயராஜ்,  தா.உதயசூரியன். அவையில் அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்களில்  முதல் ஐந்து நிலைகளில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப் பணித்  துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா.சுப்ப்பிரமணியன், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.

The post இதர கட்சியினருக்கு பேச கூடுதல் வாய்ப்பு சட்டப்பேரவை 168 மணி 56 நிமிடம் நடந்தது: பார்வையாளர்கள் மாடத்தில் 23,221 பேர் நிகழ்வுகளை பார்த்துள்ளனர், சபாநாயகர் அப்பாவு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article