
சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்னும் லீக், பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உட்பட 16 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனால் இந்த ஆட்டங்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்களை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.