
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்துள்ளன.
இந்த நிலையில் போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நீடித்து வந்த போர் பதற்றம் இருநாட்டு தலைவர்களின் ஒப்புதலோடு முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது.
பாகிஸ்தானின் தொடர் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய பாதுகாப்புத்துறையின் முப்படை வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.