*பாதாள சாக்கடை பணியால் பரிதவிப்பு
கோவை : கோவை திருச்சி ரோட்டில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. ரோட்டின் மைய பகுதியில் சாக்கடை சேம்பர் மற்றும் குழாய் அமைக்க பல அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.
குழியில் கான்கிரீட் சேம்பர் அமைக்க பல நாட்கள் கால தாமதம் செய்து வருகின்றனர். குழி தோண்டி கம்பி கட்டி அதை அப்படியே காட்சி பொருளாக விட்டு விட்டனர். ரோட்டின் ஒரு பகுதியில் மண் குவியில் அதிகளவு குவிக்கப்பட்டிருக்கிறது.
சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழும் அபாயமும் இருக்கிறது.
இது குறித்து ஒண்டிப்புதூர் மக்கள் கூறுகையில்,‘‘ரோடு அமைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சாக்கடைக்காக குழி வெட்டி விட்டனர். புதிதாக ரோடு போட்ட பின்னர் சாக்கடை பணிக்காக குழி தோண்டுவதால் அரசுக்கு வருவாய், நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும், குழியை தோண்டுவதும் மூடுவதும் என கால தாமதம் இருக்கிறது.
சாக்கடை பணிகளை வேகமாக முடிக்க மாநகராட்சி தீவிரம் காட்ட வேண்டும். பல மாதங்களாக பணியை நடத்துவதால் மக்களுக்கு அதிக தொந்தரவாக இருக்கிறது. பணி தாமதம் செய்யும் நிறுவனங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். சாக்கடை பணிகள் முடிந்தால் அந்த இடத்தை சீரமைத்து ரோடு போடவும் கால தாமதம் செய்து வருகிறார்கள். மண் குவியலால் பல இடங்களில் புழுதி மண்டலமாக மாறி விட்டது.
சில இடங்களில் குடிநீர் பணிக்காகவும் ரோட்டில் குழி தோண்டி அப்படியே விட்டு விட்டார்கள். இதே நிலைமை இருந்தால், ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் போய் விடும்’’ என்றனர்.
The post ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரத்தில் குழி தோண்டி போட்டாங்க, வேலையை முடிக்கலையே… appeared first on Dinakaran.