ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

2 weeks ago 3

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, 300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று குறிப்பிட்டார்.

கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரின் பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்தன. இதையடுத்து தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகை கஸ்தூரி இன்று அறிக்கை வெளியிட்டார். அதில் தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை, கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

இதனிடையே நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தன்னை விளம்பரப்படுத்த கஸ்தூரி அவதூறாக பேசுகிறார். அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதற்கோ, விரும்பிய தொழிலை நிம்மதியாக செய்வதற்கோ எந்தவொரு தடையும் தமிழ்நாட்டில் இல்லை என்பது நாடறிந்தது வெறுப்பின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடவும் திராவிட மாடல் ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் இம்மண்ணில் வெற்றி பெறாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா?

- கழக துணைப் பொதுச்செயலாளர் திரு @dmk_raja எம்.பி., அவர்கள் அறிக்கை pic.twitter.com/23Dwr7Olsf

— DMK (@arivalayam) November 5, 2024

Read Entire Article