சென்னை,
சென்னையில் மின்சார ரெயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கல்வி, வேலை, தொழில் நிமித்தமாக பயணிப்போருக்கு மின்சார ரெயில் சேவை மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் ரெயிலில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை சென்டிரல் - திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் தினசரி 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னையில் மின்சார ரெயில்களில் தினந்தோறும் 8.5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர் என்று சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சென்னை கோட்டத்தில் ரெயிலை தினந்தோறும் 11 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். அதில் 8.5 லட்சம் பயணிகள் மின்சார ரெயிலையும், 3 லட்சம் பயணிகள் மற்ற ரெயில்களையும் பயன்படுத்துகின்றனர். சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த டிசம்பர் வரை ரூ.3 ஆயிரத்து 300 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 7.31 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாடு திட்டத்தின் கீழ் 17 ரெயில் நிலையங்கள் ரூ.200 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரூ.160 கோடி மதிப்பில் 21 ரெயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய 3 ரெயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 4-வது ரெயில் முனையத்தை பெரம்பூர்-வில்லிவாக்கம் இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயார் செய்து ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை-கூடூர், சென்னை-ஜோலார்பேட்டை, அரக்கோணம்-ரேணிகுண்டா ஆகிய ரெயில் வழித்தடங்களில் 130 கி.மீ வேகத்தில் ரெயில்கள் இயக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் 40 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு 99 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.