ஒடிசா பல்கலைக்கழக விடுதியில் மரணம்; நேபாள மாணவியின் இறுதி சடங்கை செய்த தந்தை

3 days ago 5

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் (கே.ஐ.ஐ.டி.) செயல்பட்டு வருகிறது. தரவரிசையில் முன்னிலையில் உள்ள பல்கலைக்கழகங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள இந்த கல்வி மையத்தின் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை மாலை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நேபாளத்தின் பீர்குஞ்ச் பகுதியை சேர்ந்த 18 வயது பிரிசா ஷா என்ற அந்த மாணவி, கணினி அறிவியல் படிப்பை படித்து வந்துள்ளார். இந்த தகவலை காவல் ஆணையாளர் தேவ் தத்தா சிங் உறுதி செய்துள்ளார். இதுபற்றி இந்தியாவில் உள்ள நேபாள தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாணவியின் பெற்றோர் புவனேஸ்வர் நகருக்கு வந்தனர். 3 மாதங்களுக்கு முன், பி.டெக் மூன்றாம் ஆண்டு படிப்பை படித்து வந்த பிரகிரிதி லம்சால் என்ற நேபாள மாணவி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தற்கொலைக்கு தூண்டினார் என கே.ஐ.ஐ.டி. கல்வி மையத்தின் 21 வயது மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேர் மீதும் வழக்கு பதிவானது.

இந்நிலையில், மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரலில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியை சேர்ந்த அர்னாப் முகர்ஜி என்ற மாணவர் புவனேஸ்வரில் மன்சேஸ்வர் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். பி.டெக் மூன்றாம் ஆண்டு படிப்பை படித்து வந்த அந்த மாணவர் கே.ஐ.ஐ.டி. பல்கலைக்கழக விடுதிகளில் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில், பிரிசா ஷாவின் இறுதி சடங்கை ஒடிசாவில் அவருடைய குடும்பத்தினர் நேற்று செய்தனர். நேபாள பாரம்பரியத்தின்படி, பிரிசாவின் தந்தை ஷியாம் ஷா, பிரிசாவின் உடலுக்கு தீ மூட்டினார். அப்போது, பிரிசாவின் தாயார் பிங்கி ஷா மற்றும் அகில பாரதீய நேபாள ஏக்தா சமாஜ் கமிட்டி உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

பிரிசாவின் தந்தை, எங்களுடைய மகள் எப்படி, ஏன் மரணம் உயிரிழந்தாள் என எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கண்ணீருடன் கூறினார். மாலை 3 மணியளவில் மகிழ்ச்சியாக வீட்டில் உள்ளவர்களுடன் பேசினாள். 8 மணிக்கு அவள் உயிரிழந்து விட்டாள் என தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.

இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை தேவை என நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது. 90 நாட்களில் இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த 2-வது துயர சம்பவம் இதுவாகும்.

Read Entire Article