
புதுடெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்திய பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய்ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கிய நமது இந்திய பாதுகாப்பு படைகளை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் மன உறுதியையும், தைரியத்தையும் பாராட்டுகிறோம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த நாளில் இருந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் எடுக்க பாதுகாப்பு படைகள் மற்றும் அரசாங்கத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது. தேசிய நலன் நமக்கு மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் டெல்லியில் இன்று மதியம் காங்கிரஸ் கட்சி சார்பில் அவசர செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 3 மணிக்கு அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.