சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரி செல்வநாகரத்தினத்துக்கு அனுப்பப்பட்ட குற்ற குறிப்பாணைக்கு (சார்ஜ் மெமோ) இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ஐபிஎஸ் அதிகாரி பி.செல்வ நாகரத்தினம் 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்துகொள்வதாக கூறி உடல் ரீதியான உறவில் இருந்ததாகவும், பின்னர் முறையாக பேசாதது குறித்து கேட்ட போது, துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் டிஜிபிக்கு புகாரளித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், செல்வநாகத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் டிஜிபி சார்பில், செல்வ நாகரத்தினத்திற்கு மெமோ அனுப்பப்பட்டு 30 நாட்களில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து செல்வ நாகரத்தினம் சார்பில் சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், செல்வநாகரத்தினத்திற்கு வழங்கபட்ட மெமோவை ரத்து செய்தது.
மேலும், புதிதாக மெமோ வழங்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனுப்பப்பட்ட புதிய மெமோவை எதிர்த்து செல்வநாகரத்தினம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில், மெமோவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று செல்வ நாகரத்தினம் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
The post ஐபிஎஸ் அதிகாரி செல்வ நாகரத்தினத்திற்கு அனுப்பப்பட்ட மெமோவுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.