ஐதராபாத் சார்மினார் அருகே இன்று பயங்கர தீ விபத்து : 17 பேர் கருகி பலி

3 hours ago 2

திருமலை: ஐதராபாத் சார்மினார் அருகே இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி இறந்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினார் அருகே கிருஷ்ணா என்பவரின் வீடு உள்ளது. கீழ்தளத்தில் இவர் கடை நடத்தி வருகிறார். மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மிக குறுகலான பகுதியான இங்கு அடுத்தடுத்து வீடு, கடைகள் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் கிருஷ்ணாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் உள்ள மற்ற வீடுகள் மற்றும் கடைகளுக்கு வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்து அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் சிலர் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர். சுமார் ஒரு மணி நேரம் போராடி வீடு மற்றும் கடைகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 17 பேர் உடல் கருகி இறந்தனர், பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஐதராபாத் சார்மினார் அருகே இன்று பயங்கர தீ விபத்து : 17 பேர் கருகி பலி appeared first on Dinakaran.

Read Entire Article