ஐடி, ஈடி ரெய்டால் அதிர்ச்சியில் உறைந்த சேலத்துக்காரர், தேனிக்காரர் அணி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 weeks ago 6

‘‘ஏற்கனவே ரெண்டு கோஷ்டியா செயல்பட்டு வரும் நிலையில், புதிய மாநகராட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் இலைக்கட்சி தொண்டர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘லிங்க சாமி பெயரில் துவங்கும் மாவட்டத்தில் உள்ள கல்விக்கு பெயர் பெற்ற குடி என முடியும் ஊர் சமீபத்தில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வளர்ச்சிப்பணிகள் ஜெட் வேகத்தில் நடந்துக்கிட்டு வருது.. பல ஆண்டு கோரிக்கையை அரசு நிறைவேற்றியதில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இலைக்கட்சி தரப்பு ஏனோ ஓவராக அப்செட் ஆக இருக்கிறதாம்… சமீபத்தில் மாநகராட்சி கூட்டம் நடந்தபோது, இலைக்கட்சி கவுன்சிலர் ஒருவர், மாநகராட்சி ஆனதை விமர்சித்தும், வேண்டுமென்றே தேவையில்லாத பிரச்னைகளை இணைத்து நீண்ட நேரம் பேசினாராம்.. அப்போது அவரது கட்சி உள்பட பிற கட்சி கவுன்சிலர்கள் தாங்களும் பேச வாய்ப்பு வழங்க வேண்டுமென கோஷமிட்டிருக்காங்க.. இதனால் டென்ஷனான இலைக்கட்சி கவுன்சிலர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திட்டாராம்.. மேலும், இலைக்கட்சியில் உள்ள மற்ற 4 கவுன்சிலர்களும், தன்னோடு வெளிநடப்பு செய்வார்கள்னு காத்திருந்தாராம்.. ஆனால், ரொம்ப நேரம் கழிச்சு, ஒருத்தர் மட்டுமே வெளியே வந்திருக்காரு.. மற்ற 3 பேரும் உள்ளேயே இருந்துவிட்டாங்களாம்.. ‘இதென்னப்பா… நம்ம கட்சிக்கார கவுன்சிலர்களே, நமக்கு சப்போர்ட்டா இல்லையே…? இப்படி இருந்தால் எப்படி கூட்டத்துல எதிர்குரல் எழுப்ப முடியும்’ என புலம்பியிருக்கிறாரு.. மாவட்டத்தில் ஏற்கனவே இலைக்கட்சியில் மாவட்ட முக்கிய நிர்வாகி, மாஜி அமைச்சர் தலைமையில் 2 கோஷ்டிகள் செயல்படுகிறதாம்… இதனால் மாவட்டத்தில் கட்சி வலுவிழந்து வரும் சூழலில், மாநகராட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் மேலும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.. இதுதொடர்பாக தலைமைக்கும் தகவல் பறந்திருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரைக்கு ஆதரவாக செயல்பட்டால்தான் கட்சியில் நிம்மதியா இருக்க முடியும்.. இல்லாவிட்டால் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறிதான் என சேலத்துக்காரர், தேனிக்காரர் அணி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் சேலத்துக்காரரின் நெருங்கிய நண்பரின் கல்லூரிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல, நெற்களஞ்சிய மாவட்டத்தில் தேனிக்காரரின் வலது கரமாக உள்ள வைத்தியானவரின் வீட்டிலும் ஈடி சோதனை நடந்திருக்கு.. இந்த சோதனையால் டெல்டாவில் உள்ள சேலத்துக்காரர், தேனிக்காரர் அணிகளில் உள்ள மாஜி அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ரொம்பவே அதிர்ச்சியில் இருந்து வருகிறார்களாம்… அடுத்தது நாமாக இருக்கலாமோன்னு அவர்கள் பீதியில் உறைந்துள்ளார்களாம்… இதை சரிகட்ட பல்வேறு கட்ட முயற்சிகளை அவர்கள் தற்போது தொடங்கியிருக்கிறார்களாம்.. இதனால் உறவினர்கள் உள்பட முக்கிய நபர்கள் யாரும் தங்களை பார்க்க வர வேண்டாம்னு அவர்கள் கறாராக சொல்லிட்டாங்களாம்… தாமரைக்கு ஆதரவாக செயல்பட்டால்தான் கட்சியில் நிம்மதியாக இருக்க முடியும்.. இல்லை என்றால் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே, தொடர்ந்து, தாமரைக்கு ஆதவராக செயல்பட அவர்கள் முடிவு எடுத்திருக்காங்களாம்.. இந்த டாப்பிக் தான் டெல்டா மாவட்டத்தில் அரசல் புரசலாக ஓடிக்கிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரெண்டாங் கட்ட அதிகாரிங்க ஷாக் ஆகும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் கண்கொத்தி பாம்பாக பார்க்கும் ஜெயில் அதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஜெயில் டிப்பார்ட்மென்டின் டிஜிபியாக இருக்க கூடியவர் ரொம்பவும் நேர்மையான அதிகாரியாம்.. ஆரம்பத்தில் ஜெயில் துறை பிடிக்காமல் ரெண்டே மாதத்தில் மாறிடுவேன்னு சொன்னாராம்.. இதனால அதிகாரிகள் ரெண்டு மாதம் தானேன்னு பல்லைக்கடிச்சிக்கிட்டு இருந்தாங்களாம்.. ஆனால், திடீரென ரெண்டு வருடத்திற்கு இங்கிருந்து வெளியே போகும் ஐடியாவே இல்லைன்னு சொல்லிட்டாராம்.. இதை கேள்விப்பட்டதும் அதிகாரிகளுக்கு உலகமே இருண்டு போச்சாம்.. அதே நேரத்துல அந்த அதிகாரி ஒவ்வொரு விஷயத்திலும் கண்கொத்தி பாம்பாகவே பார்த்துக்கிட்டு இருக்காராம்.. சிறையில் சிறுசிறு வேலைகள் நடந்தாலும் பணம் இல்லைன்னு யாரும் சொல்லக்கூடாது, இவ்வளவு நாள் சம்பாதித்த காசை வச்சி செலவு செய்யுங்கன்னு அடிச்சி சொல்றதா அதிகாரிகள் சொல்றாங்க.. நொங்கு தின்னுவது ஒருத்தன், கூந்தலை வளித்தவன் சிக்கணுமான்னு சில நேர்மையான அதிகாரிகள் புலம்புறாங்க.. இந்நேரத்துல அந்த அதிகாரி மாங்கனி ஜெயிலுக்கு திடீரென வந்திருக்காரு. அவர் எங்கே தங்கப்போறாருன்னு யாருக்கும் தெரியல. குளுகுளு ஏற்காட்டிற்கு போயிட்டு ஜெயிலுக்கு வந்திருக்காரு.. ஜெயிலை பத்தி என்ன தெரியபோகுது, எல்லாமே நம்மிடம் கேட்டுத்தான் தெரிஞ்சிக்கிட்டு போயிடுவாருன்னு இருந்த ரெண்டாங்கட்ட அதிகாரிகள் ஷாக்காகும் வகையில் கேள்விகளை கேட்டிருக்காரு.. தண்டனை குறைப்பு பிரிவுல 15 வார்டர்கள் வேலையில இருந்திருக்காங்க.. எதற்காக இத்தனை பேர் இங்கிருக்கிறீர்கள் என கேட்டு, 10 பேர் டூட்டிக்கு போகுமாறு விரட்டிவிட்டிருக்காரு..
இப்படியாக அவரது ஆய்வு நடந்திருக்கு. அதேபோல ஜெயிலுக்குள்ள ஒவ்வொரு அறைக்கும் பல்வேறு பெயர்களை சொல்லித்தான் அழைப்பாங்களாம்.. திபாக்கினி என்ற செவிலியர் பெயரிலும் ஒரு அறை இருக்காம்.. ஆனால் எந்த பெயரைச்சொல்லியும் அழைக்க கூடாதுன்னு உத்தரவு போட்டதுடன், 1, 2 என நம்பர் பெயரை சொல்லித்தான் அழைக்க வேண்டுமென சொல்லியிருக்காரு.. இப்படியாக அவரது ஆய்வு சென்ற நிலையில், ஜெயிலில் உள்ள அனைத்து ஊழல் பெருச்சாளிகளையும் ஒரு கை பார்க்காமல் போகமாட்டாருன்னு நேர்மையான வார்டர்கள் சொல்றாங்க…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post ஐடி, ஈடி ரெய்டால் அதிர்ச்சியில் உறைந்த சேலத்துக்காரர், தேனிக்காரர் அணி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article