சென்னை: ஐஐடி மாணவர்கள் தயாரித்து வரும் மொழி பெயர்ப்பு செயலி மூலமாக இனிவரும் காலங்களில் மொழி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒன்றிய அரசின் மை பாரத் 16வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது . இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேளத்தை தட்டி விழாவை துவக்கி வைத்தார்.
இதில் ஒன்றிய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்து பழங்குடி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ- மாணவிகளுடன் ஆளுநர் கலந்துரையாடினார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஐஐடி மாணவர்கள் செயற்கைக்கோள்களை தயாரிப்பது மட்டுமில்லாமல் உலகில் எந்த மொழியில் இருந்து தொலைபேசியில் பேசினாலும் நம் தாய் மொழியில் மொழிபெயர்க்கக் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.
நீங்கள் அங்கு செல்லும்போது அங்குள்ள தொழில்நுட்ப வசதிகளை பார்வையிடுங்கள். அது நீங்களும் எதிர்காலத்தில் சாதிக்க உத்வேகமளிக்கும். தற்போது ஐஐடி மாணவர்கள் தயாரித்து வரும் இந்த மொழி பெயர்ப்பு செயலி மூலமாக இனிவரும் காலங்களில் மொழி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.
The post ஐஐடி மாணவர்கள் தயாரித்து வரும் மொழி பெயர்ப்பு செயலி மூலமாக இனிவரும் காலங்களில் மொழி பிரச்னைக்கு தீர்வு: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.