ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி பொதுத்துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து: ஒப்புதல் அளித்தது ஒன்றிய அரசு

4 hours ago 1


சென்னை: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நவரத்னா நிறுவனம் என்பது இந்தியாவில் நவரத்னா அந்தஸ்து பெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. உள்நாட்டிலும் உலக அளவிலும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஒரு மதிப்புமிக்க நிலையை வகிக்கின்றன.

நவரத்னாவாக நியமிக்கப்பட்டவுடன், இந்த நிறுவனங்களுக்கு மூலதனச் செலவு, கூட்டு முயற்சிகள் அல்லது துணை நிறுவனங்களில் முதலீடு மற்றும் மனிதவள மேலாண்மை போன்ற துறைகளில் அதிகாரம் வழங்கப்படுகிறது.தற்போது நாட்டில் உள்ள நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எப்சி ஆகியவை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ. 4,270.18 கோடி வருவாய் ஈட்டியுள்ளது ஐஆர்சிடிசி. இதில் வரிக்குப் பிந்தைய லாபம் மட்டும் ரூ.1,111.26 கோடியாகும். இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.3,229.97 கோடியாகும்.

அதேபோல், ஐஆர்எப்சி நிறுவனத்தின் 2023-24 நிதியாண்டு வருவாய் ரூ.26,644 கோடி, லாபம் ரூ. 6,412 கோடியாகும். நிகர மதிப்பு ரூ.49,178 கோடியாக உள்ளது. நவரத்னா அந்தஸ்து பெறும் நிறுவனங்களுக்கு செயல்பாட்டு சுதந்திரம் மற்றும் நிதி சுயாட்சி வழங்கப்படுகிறது. நவரத்னா அந்தஸ்து பெறும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறாமல், ரூ. 1,000 கோடி வரை ஒரு திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியும். அந்த வகையில், ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எப்சி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

* நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட், நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், என்எம்டிசி லிமிடெட் ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், ஐஆர்சிஓஎன், ரைட்ஸ் நேஷனல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன், ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ரெனியூவபிள் எரிசக்தி டெவலப்மென்ட் ஏஜென்சி லிமிடெட், மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்.

The post ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி பொதுத்துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து: ஒப்புதல் அளித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article