
பெங்களூரு,
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.
இதனிடையே இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதில் முக்கியமாக ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இதனால் பெரும்பாலான ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று கூறப்பட்டது.
மேலும் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று தகவல் வெளியாகியது. தோள்பட்டை காயத்தால் அவர் அவதிப்படுவதால் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. அதனால் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் இந்தியாவுக்கு திரும்பி பெங்களூரு அணியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.