ஜெய்ப்பூர்,
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் தீவிரமான தாக்குதல் மற்றும் போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியதால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அத்துடன் ஐ.பி.எல். போட்டி ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.
இரு நாடுகளும் தற்போது போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு கவுன்சிலின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு இ-மெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மைதானம் உடனடியாக காலி செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு செயலிழப்பு குழு, மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விரிவான விசாரணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் 2-வது முறையாக இந்த மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகள் இங்கு நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.