
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 60 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 10 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இதன் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முறையே பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விட்டன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் வெளியேறி விட்டன.
பிளே ஆப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
இந்த 3 அணிகளுக்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து காணலாம்..!
மும்பை இந்தியன்ஸ்:
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் பெற்ற நிலையில் 4-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி பிளே ஆப் சுற்றை எட்டி விடும். ஒன்றில் தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் வெளியேற வேண்டியதுதான்.
மும்பை அணிக்கு அடுத்த 2 போட்டிகள் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கெதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிடல்ஸ்:
12 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். மாறாக ஒன்றில் தோல்வியடைந்தால் மும்பை மற்றும் லக்னோ அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
டெல்லி அணிக்கு அடுத்த போட்டிகள் முறையே மும்பை (மே 21-ம் தேதி) மற்றும் பஞ்சாப் (மே 24-ம் தேதி) அணிகளுக்கு எதிராக உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:
11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவு லக்னோவுக்கு சாதகமாக அமைய வேண்டும். மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் முறையே தங்களது 2 ஆட்டங்களிலும் தோல்வியடைய வேண்டும். மாறாக லக்னோ அணி ஒன்றில் தோல்வியடைந்தாலும் வெளியேற வேண்டியதுதான்.
லக்னோ அணிக்கு 3 போட்டிகள் முறையே சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் மற்றும் பெங்களூருவுக்கு எதிராக உள்ளன.