
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் போகர்தான் தாலுகாவில் உள்ள தக்லி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக தாமு பீம்ராவ் ரோஜேகர் என்பவர் உள்ளார். இவர் நேற்று பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனால் மாணவர்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது பள்ளிக்கு வந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலிராம் கவந்தேவால், தலைமை ஆசிரியரின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், குடிபோதையில் மதிமயங்கி கிடந்த தலைமை ஆசிரியரை அழைத்து சென்று ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் தலைமை ஆசிரியர் தாமு பீம்ராவ் ரோஜேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.