ஆசிரியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

7 hours ago 2

சென்னை ,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தொடர்ந்து எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதோடு கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 181 கீழ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோருவது தவறா? தேர்தல் நேரத்தில் மட்டும் நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், பின் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் அதிகாரிகளைப் பேச விட்டு அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா? தங்கள் உரிமைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆசிரியர்கள் போராடட்டும் என அலைக்கழிப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனும் பாதிக்கப்படும் எனும் அடிப்படை உண்மையைக்கூட உணர இயலாதா?

ஆசிரியர்களை வதைத்தது போதாதென்று, ஆசிரியர்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்த செய்தியாளர்களையும் காவலர்கள் தள்ளி விட்டிருப்பது திமுக அரசின் அராஜகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?

'நாடு போற்றும் நல்லாட்சி' என்று விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு உடனடியாக பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் காக்கும் பொருட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை தமிழக பாஜக போராட்டக் களத்தில் துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article