
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் டெல்லி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வரும் 24ம் தேதி நடக்கிறது. இந்த தொடருக்காக கடந்த நவம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6¼ கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை வாங்கியது.
இதனிடையே அவர் திடீரென இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் விளையாட அவருக்கு பி.சி.சி.ஐ. 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
அதற்கான காரணம் என்னவெனில், ஐ.பி.எல். புதிய விதிப்படி ஒரு வீரர் அத்தியாவசிய காரணமின்றி விலகினால் 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்ற ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் அவருக்கு ஐ.பி.எல்.-ல் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.