
சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், கலைஞர் கைவினை திட்டத்தில், 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.75 கோடி ஒதுக்கீடு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு, காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ரூ.120 கோடி செலவில் தரம் உயர்வு, மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு. ரூ.600 கோடி ஒதுக்கீட்டில், நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் 2025-26 நிதியாண்டில் மாநில அரசு ரூ.1.62 லட்சம் கோடிக்கு மொத்தக் கடன் பெறத் திட்டம். அதேவேளையில் ரூ.55,844 கோடி பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும். 2026 மார்ச் 31-ம் தேதிப்படி தமிழ்நாடு அரசின் நிலுவையில் உள்ள கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும். எனினும், மாநில ஜி.டி.பி. மதிப்பில் இது 26.07% ஆகும். சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
* ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்
* இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்
* தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
* புதிய நகரம்
* புதிய விமான நிலையம்
* புதிய நீர்த்தேக்கம்
* அதிவேக ரெயில் சேவை
என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 'எல்லோர்க்கும் எல்லாம்' எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 2025. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.