ஐ.பி.எல். தொடரில் 'மேட்ச் பிக்சிங்' நடக்கிறது - பாக்.முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு

2 weeks ago 1

லாகூர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த 19-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தது. பரபரப்பான அந்த ஓவரை வீசிய லக்னோ வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தற்காலிக குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய்தீப் பிஹானி சர்ச்சையை கிளப்பினார். ஏனெனில் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட பிறகு சொந்த மண்ணில் ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படி தோற்றது? என்று கேள்வி எழுப்பினார். எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

இருப்பினும் ஒரு பந்தில் வெற்றி மாறக்கூடிய ஐ.பி.எல். தொடரில் அது சாதாரண தோல்வி என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் பதில் கொடுத்தது. எனவே அந்த அடிப்படை ஆதாரமற்ற விமர்சனம் போல தாங்கள் மேட்ச் பிக்சிங் எதுவும் செய்யவில்லை என்றும் ராஜஸ்தான் நிர்வாகம் தெளிவுப்படுத்தியது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் 'பிக்சிங்' நடப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எங்களுடைய ஐ.பி.எல். உலகத்திலேயே மிகப்பெரிய லீக் என பி.சி.சி.ஐ. சொல்கிறது . ஆம், அது சரிதான். ஆனால் மேட்ச் பிக்சிங்கும் அங்கு பெரியதாகவே நடக்கிறது. பெரும்பாலும் அணிகள் அனைத்தும் பிக்சர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன" என்று கூறினார்.

Read Entire Article