
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 76 ரன்கள் எடுத்து அசத்திய ரோகித் சர்மா, ஐ.பி.எல். தொடரில் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் ஷிகர் தவானை முந்தி 2வது இடத்திற்கு சென்றுள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவானை (6769 ரன்) பின்னுக்கு தள்ளி, ரோகித் சர்மா (6786 ரன்) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப்பட்டியலில் விராட் கோலி (8326 ரன்) முதல் இடத்தில் உள்ளார். ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
விராட் கோலி - 8326 ரன்
ரோகித் சர்மா - 6786 ரன்
டேவிட் வார்னர் - 6565 ரன்
சுரேஷ் ரெய்னா - 5528 ரன்