
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சந்திக்கிறது.
ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோற்றுள்ளது. முந்தைய மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது.
தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால்தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில் இருக்கும் லக்னோ அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். மாறாக தோற்றால் அந்த அணியின் வாய்ப்பு பறிபோய் விடும்.
லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளித்தாலும், தாக்கம் எற்படுத்த தவறுகின்றனர்.
ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை (டெல்லிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணியில் அதிரடி சூரர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களது ஆட்டம் ஒருசேர நன்றாக அமையாததால் சறுக்கலை சந்தித்தது.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (314 ரன்), ஹென்ரிச் கிளாசென் (311), நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன் என்று பெரிய அதிரடி பட்டாளமே இருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் சரியாக நிலைத்து நிற்கவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி வலுசேர்க்கின்றனர். அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று இந்தியா வருகிறார். அவர் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம்தான்.
ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எல்லா வகையிலும் வரிந்து கட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் முடிந்த வரை முன்னேற்றம் காண ஐதராபாத் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.