
ஆமதாபாத்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் டாப்-4 இடத்திற்குள் உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 209 ரன்கள் குவித்தும், சூர்யவன்ஷியின் 35 பந்து சதத்தால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. ஆனாலும் குஜராத்தை பொறுத்தவரை பேட்டிங்கில் மிக வலுவாக காணப்படுகிறது.
கேப்டன் சுப்மன் கில் (4 அரைசதத்துடன் 389 ரன்), சாய் சுதர்சன் (5 அரைசதம் உள்பட 456 ரன்), ஜோஸ் பட்லர் (406 ரன்) அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித்கான் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வென்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான். தனது கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சை 154 ரன்னில் மடக்கிய ஐதராபாத் அணி அந்த இலக்கை 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென், இஷான் கிஷன் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் ஒருசேர மிரட்டினால் எழுச்சி பெறலாம். பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ் முழுமையாக கைகொடுக்க வேண்டியது அவசியம். இதே போல் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சும் எடுபடவில்லை.
இவ்விரு அணிகளும் 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமநிலையான போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, கரிம் ஜனத் அல்லது ரூதர்போர்டு, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது அர்ஷத் கான்.
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ் அல்லது வியான் முல்டெர், நிதிஷ்குமார் ரெட்டி, கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனட்கட், முகமது ஷமி, ஜீசன் அன்சாரி.